செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
சென்னை பள்ளிக்கரணை அம்பேத்கர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (26). தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கரணை அடுத்த ஜல்லடையாம்பேட்டை கணேஷ் நகர் பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தை சேர்ந்த ஷர்மிளா (22) என்பவரை காதலித்துள்ளார். தொடர்ந்து, இருவரும் சுயமரியாதை திருமணம் செய்துகொண்டு எழும்பூர் ரெஜிஸ்டர் அலுவலகத்தில் பதிவு செய்து பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவில் வசித்து வந்துள்ளனர்.
ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கணவர்:
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தனியார் மதுபான விடுதிக்கு சென்ற பிரவீனை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து தாம்பரம் போலீசார் விசாரணை செய்த நிலையில், பிரவீனை ஆணவப்படுகொலை செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஷர்மிளாவின் அண்ணன் தினேஷ் (எ) குட்டி அப்பு (23), அவரது நண்பர்களான விஷ்ணு ராஜ் (25), ஸ்ரீ ராம் (18), ஜோதிலிங்கம் (25), ஸ்ரீபன் குமார் (24) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
தாய் தந்தையை வழக்கில் சேர்க்காததால் மன உளைச்சலில் இருந்த மனைவி:
இதில் தினேஷ், தன் தங்கை ஷர்மிளா வீட்டின் எதிர்ப்பை மீறி பிரவீனை திருமணம் செய்து கொண்ட சம்பவத்தில் பழி வாங்குவதற்காக கொலை செய்தது தெரியவந்தது.
இருப்பினும் பிரவீன் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமாக இருந்த ஷர்மிளாவின் தந்தை துரை, தாய் சரளா, குடும்ப உறுப்பினரான நரேஷ் ஆகிய மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. கைது நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பிரவீன் குடும்பத்தாரிடம் தொடர்ந்து கூறி வந்த ஷர்மிளா, மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
நீதி கிடைக்காது என்று அச்சத்தில் விபரீத முடிவெடுத்த மனைவி:
தொடர் மன உளைச்சலில் இருந்த ஷர்மிளா, கடந்த 14ஆம் தேதி அம்பேத்கர் நகரில் உள்ள தனது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கோமா நிலைக்குச் சென்ற ஷர்மிளாவை மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்து அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஷர்மிளா நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சட்ட உதவிகள் செய்யும் பாதை அமைப்பை சேர்ந்த வருண் குற்றச்சாட்டு:
இந்த சம்பவம் குறித்து பிரவீன் குடும்பத்திற்கு சட்ட உதவிகள் செய்யும் பாதை அமைப்பை சேர்ந்த வருண் செய்தியாளர்களிடம் பேசிய போது... “பள்ளிக்கரணை காவல் துறையினர் தொடர்சியாக இந்த ஆணவக்கொலை வழக்கை கொலையாளிகளுக்கு சாதகமாக நடத்தி வந்தனர். முதல் தகவல் அறிக்கையில் பிரவீனின் தந்தை கையெழுத்து போலியாக போடப்பட்டுள்ளது.
பிரவீன் தந்தைக்கு ஆங்கிலமே தெரியாது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது, ஷர்மிளா மிரட்டப்பட்டுள்ளார். மேலும் ஷர்மிளாவின் கணவர் பிரவீன் சாதிவெறி ஆணவப் படுகொலை செய்யப்பட்டதற்கு முக்கிய குற்றவாளிகளான ஷர்மிளாவின் பெற்றோர் மற்றும் அண்ணன் ஆகியோரை இந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை. தனது கணவர் படுகொலைக்கு நீதி கிடைக்காமல் போய்விடுமோ? என்ற மன உளைச்சலில் இருந்த ஷர்மிளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்” என தெரிவித்தார்.
முன்னதாக “பிரவீன் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ஷர்மிளாவின் பெற்றோர், மற்றொரு அண்ணன் ஆகியோர் சேர்க்கப்பட வேண்டும். ஒருதலைபட்சமாக செயல்பட்டு வரும் பள்ளிக்கரணை காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்” என பிரவீனின் தாய், முதலமைச்சர் அலுவலகம், தலைமைச் செயலாளர் அலுவலகம், தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அலுவலகம், தாம்பரம் காவல் ஆணையராகம் ஆகிய இடங்களில் கடந்த 22 ஆம் தேதி புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.