செய்தியாளர்: சாந்தகுமார்
சென்னை பல்லாவரம் ஜி.எஸ்.டி. சாலையில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் 7வது மாடியில் உமா (50), அவரது மகன் விஷ்ணு (23) ஆகிய இருவரும் வசித்து வந்துள்ளனர். உமாவின் கணவர் பாலகிருஷ்ணன் பூட்டானில் வேலை பார்த்து வரும் நிலையில், கடந்த 28ம் தேதி இரவு 7வது மாடியில் துர்நாற்றம் வீசுவதாக குடியிருப்பு வாசிகள் புகார் தெரிவித்தனர்.
புகாரின் பேரில் காவலாளி முத்துராமன் சென்று பார்த்துள்ளார். அப்போது 7வது மாடியில் இருக்கும் அனைத்து வீடுகளும் பூட்டியிருந்த நிலையில், ஒரு வீடு மட்டும் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
இது குறித்து பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஒரு அறையில் விஷ்ணு என்பவர் உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். மற்றொரு அறையில் அவரது தாய் உமா புலம்பியவாறு அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார். அவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதேபோல் உமாவை குரோம்பேட்டையில் உள்ள காப்பக்கத்தில் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து பூட்டானில் இருந்து வந்த உமாவின் கணவர் கோபாலகிருஷ்ணன், போலீசாரின் ஒப்புதலோடு உமாவை அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தினார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விஷ்ணுவின் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.