தமிழ்நாடு

ரயில் கொள்ளையில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு 14 நாள் காவல்

ரயில் கொள்ளையில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு 14 நாள் காவல்

webteam

சேலம்-சென்னை ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரையும் 14 நாட்கள் விசாரிக்க சிபிசிஐடி-க்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி சேலத்தில் இருந்து சென்னை வந்த விரைவு ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு 5 கோடியே 78 லட்சம் ரூபாய் வங்கிப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஓடும் ரயிலில் எப்படி மேற்கூரை பிரித்து கொள்ளையடித்தனர்? எனக் காவல்துறையினர் குழம்பினர். 

இந்நிலையில், கொள்ளை சம்பவம் தொடர்பாக மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த தினேஷ் மற்றும் ரோஹன் ஆகியோர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 12ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் பெறப்பட்ட தகவலில் கொள்ளை கும்பல் குறித்த தகவல்கள் பெறப்பட்டன. ஆனால் கொள்ளைக்கும்பல் தலைவன் மோஹர்சிங் மற்றும் காளியா, மகேஷ், பில்த்தியா, ருசி ஆகிய 5 பேர், வேறொரு வழக்கில் மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். 

அங்கு 5 பேரையும் மத்திய பிரதேசத்தில் வைத்து கைது செய்த தமிழக சிபிசிஐடி காவல்துறையினர், மத்திய பிரதேச நீதிமன்றத்தில் அனுமதி பெற்று அவர்களை சென்னை அழைத்து வந்தனர். இன்று 5 பேரும் சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து அவர்களிடம் 14 நாட்கள் விசாரணை நடத்த சிபிசிஐடி காவல்துறையினருக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.