செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
குன்றத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் தனியார் வங்கி மேலாளரான கிரிதரன் என்பவர், தனது வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்ததால் பூச்சிகளை கட்டுப்படுத்தும் தனியார் நிறுவனத்தை அழைத்துள்ளார். அவர்கள் இரவில் எலி மருந்து அடித்ததோடு, எலிமருந்தை வீட்டில் வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பிய மனைவி பவித்ரா மற்றும் 2 குழந்தைகளும் கிரிதரனும் வீட்டில் இரவு ஏசி போட்டு உறங்கியுள்ளனர். காலையில் அனைவருக்கும் மூச்சுத் திணறலுடன் வாந்தியுடன் வயிற்றுப்போக்கு ஆனது. அக்கம்பக்கம் இருந்தவர்கள், கிரிதரன், பவித்ரா மற்றும் 2 குழந்தைகளையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் ஆறு வயது சிறுமி ஒரு வயது சிறுவன் ஆகியோர் உயிரிழந்தனர். இதை அடுத்து கிரிதரன் மற்றும் பவித்ரா ஆகியோர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் பவித்ராவுக்கு நினைவு திரும்பியது. அவரிடம் காவல்துறை நடத்தி விசாரணையில் வீட்டில் எலி மற்றும் பூச்சி தொல்லை இருந்ததால் ஆன்லைன் மூலம் தி நகரில் உள்ள தனியார் பெஸ்ட் கண்ட்ரோலை அழைத்ததாகவும் அவர்கள், வீட்டில் கதவு ஜன்னல் உள்ளிட்டவற்றில் பேஸ்ட் போன்ற மருந்து வைத்ததாகவும் எலிக்கு வீட்டை சுற்றி டேப்லெட் வைத்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து தனியார் பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனம் மற்றும் நிறுவனத்தின் நிர்வாகி உட்பட 3 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். வீட்டில் மருந்து அடித்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நிகழ்விடத்தில் தாம்பரம் காவல் ஆணையரக தடயவியல் துறை உதவி இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வீட்டில், அளவுக்கு அதிகமாக மருந்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறிய அவர், சோதனைகளுக்குப் பிறகு இது குறித்து முடிவு தெரியவரும் என்று தெரிவித்தார். வீட்டில் வைக்கப்பட்டிருந்த எலி மருந்தால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்திருக்கிறார்கள். மூடப்பட்ட அறையில் பூச்சிக்கொல்லி மருந்து வைக்கப்பட்டிருந்தது இதற்கு காரணமாக இருக்கலாம் என வேதியியல் துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.