தமிழ்நாடு

‘பையன் கண் முன்னே போலீஸ் அடிச்சாங்க’ - தாக்கப்பட்டவரின் தாய் உருக்கம்..

‘பையன் கண் முன்னே போலீஸ் அடிச்சாங்க’ - தாக்கப்பட்டவரின் தாய் உருக்கம்..

webteam

சென்னையில் போக்குவரத்து காவலர்களுடன் தகராறில் ஈடுபட்டதாக சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
 
சென்னை தியாகராய நகரில் சில தினங்களுக்கு முன்னர் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக தனது தாயார், தங்கையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை போக்குவரத்து காவல்துறையினர் தாக்கினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

பின்னர் தாக்கப்படுவதற்கு முன் அந்த இளைஞர் பேசியதும், சமூக வலைத்தளங்களில் பரவியது. அந்த வீடியோவில் அந்த இளைஞர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து, செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருப்பார். இதன் பின்னர் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக, போலீஸார் அவரை அடித்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. இதற்கிடையில் காவலர்‌களு‌டன் மோதலில் ஈடுபட்டதாக, அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் பிரகாஷை ஜாமீனில் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.  இதுதொடர்பாக பேசிய அவரின் தாயார், போக்குவரத்து காவல்துறையினர் தகாத வார்த்தையால் பேசி தன்னை தாக்கியது தான் பிரச்னைக்கு காரணம் எனக் கூறினார்.

அத்துடன் பிரகாஷ் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் பேசும் போது, ‘போலீஸார் என்ன சமாதானம் சொன்னாலும், மகன் கண் முன்னே தாயை அடித்தது’ ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனக் கூறினார். அத்துடன் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுடன் இனக்கமான சூழலை காவல்துறையினர் கையாள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.