தமிழ்நாடு

சென்னை டூ மைசூரு வந்தே பாரத் ரயில்: இன்று சோதனை ஓட்டம்!

சென்னை டூ மைசூரு வந்தே பாரத் ரயில்: இன்று சோதனை ஓட்டம்!

webteam

சென்னை - மைசூரு இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று சென்னை சென்ட்ரலில் துவங்கியது.

இந்திய ரயில் தடத்தில் அதிவேக பயணத்தை மேற்கொள்ளும் வந்தே பாரத் ரயில் திட்டம் ஏற்கனவே நான்கு வழித்தடங்களில் துவங்கப்பட்டுள்ள நிலையில், ஐந்தாவதாக சென்னை - மைசூர் இடையே இயக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 11ஆம் தேதி கர்நாடகாவில் துவங்கி வைக்கிறார்.

சென்னை ஐசிஎப்-ல் தயாரிக்கப்பட்ட இந்த ரயில் கடந்த வாரம் தெற்கு ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் பயணம் செய்வதற்கு முன்பு ரயிலை சோதிக்கும் விதமாக சென்னையில் இருந்து மைசூருக்கும் மைசூரில் இருந்து சென்னைக்கும் இன்று சோதனை ஓட்டம் துவங்கியது.

இன்று காலை 5.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரயில், ஜோலார்பேட்டைக்கு 8.50 மணிக்கும், கே.எஸ்.ஆர் பெங்களூரு ரயில் நிலையத்திற்கு 10.25 மணிக்கு சென்று சேரும். அங்கு 5 நிமிடங்கள் நின்றுவிட்டு 10.30 மணிக்கு புறப்பட்டு மைசூருவை 12.30 மணிக்கு சென்றடையும்.

இதைத் தொடர்ந்து மைசூரில் இருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்படும் இந்த ரயில் இரவு 7.45 மணிக்கு சென்னை வந்தடையும். 504 கி.மீட்டர் தொலைவை 6.40 மணி நேரத்தில் கடக்கிறது. இந்த ரயில் 75.60 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.