தமிழ்நாடு

''வெப்பக்காற்றில் சிக்கத்தொடங்கிய சென்னை; இது வெறும் ட்ரைலர் தான்'' - வெதர்மேன் பிரதீப்

''வெப்பக்காற்றில் சிக்கத்தொடங்கிய சென்னை; இது வெறும் ட்ரைலர் தான்'' - வெதர்மேன் பிரதீப்

webteam

சென்னையில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாட தொடங்கிவிட்டது. இந்நிலையில் போது ஃபோனி புயலால் சென்னைக்கு கடுமையான மழை வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஃபோனி தமிழகத்தை நெருங்காமல் வடக்கு நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது. ஃபோனி அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. அடுத்த 2 அல்லது மூன்று தினங்களில் ஒடிசா அருகே கரையைக் கடக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

வங்கக்கடலில் உருவான ஃபோனி புயலால் தமிழகத்துக்கு துளியும் பயனில்லாமல் போனது. அது மட்டுமல்லாமல் இந்த புயல் இருக்கும் ஈரப்பதத்தையும் கடற்காற்றையும் சேர்த்து எடுத்துக்கொண்டு வடக்கு நோக்கி நகர்கிறது. இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் இனி வர போகும் நாட்கள் கடுமையான வெப்பக்காற்றில் சிக்கும் என தெரிகிறது.

இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள தனியார் வானிலை ஆய்வாளர் வெதர்மேன் பிரதீப், ''ஃபோனி புயலால் பயனில்லை. சென்னை முதன்முதலாக 40 டிகிரி செல்சியல் வெப்பத்தை தொட்டுள்ளது. ஆனால் இது வெறும் டிரைலர் தான். இந்த வாரத்தின் இறுதியில் இன்னும் அதிகமாக இருக்கும். இன்றும் நாளையும் மேகமூட்டம் இருக்கலாம். ஆனால் ஃபோனி வடக்கு நோக்கி நகர்ந்துவிட்டால் சென்னை வெப்பக்காற்றில் சிக்கும். சென்னை மட்டுமல்லாமல் வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய இடங்களிலும் கடுமையான வெப்பம் நிலவும்'' என தெரிவித்துள்ளார்.