செய்தியாளர்: மணிகண்டபிரபு
சென்னையில் இருந்து போடிக்கு செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்கள் இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு புறப்பட்டு இன்று காலை மதுரை ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது.
இந்நிலையில், மதுரை ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்டபோது, திடீரென மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் இருந்த சக்கரம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து ரயில், அவசர அவசரமாக நிறுத்தப்பட்டு ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த ரயில்வே அதிகாரிகள், தடம் புரண்டதை சரி செய்வதற்கான பணிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து ஒரு மணி நேரம் 26 நிமிடங்களுக்கு பின்னர் தடம்புரண்ட ரயில் பெட்டி மட்டும் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், மீதியுள்ள பெட்டிகளுடன் ரயில் மதுரை ரயில் நிலைய யார்டு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக சில ரயில்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது
இது குறித்து மதுரை கோட்ட ரயில்வே தெரிவித்த விளக்கத்தில்,
"பயணிகளுக்கு எந்த காயமும் இல்லை. விசாரணை நடைபெற்று வருகிறது. ஒரே ஒரு சக்கரம் தடம் புரண்டது. இதனால் மதுரை கோட்டத்தில் ரயில் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை. ரயில் போக்குவரத்தில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை" என தெரிவிக்கப்பட்டது. ரயில் தடம் புரண்டது தொடர்பாக மதுரைக்கோட்ட மேலாளர் இன்றே விசாரணை மேற்கொள்கிறார். தொடர்ந்து கவனக்குறைவாக பணியாளர்கள் அதிகாரிகள் செயல்பட்டது தெரியவந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் அடுத்தடுத்து ரயில் விபத்துக்கள் நடைபெற்று வரும் நிலையில், மதுரை ரயில் நிலையத்தில் திடீரென ரயில் பெட்டியின் சக்கரம் தடம்புரண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.