தமிழ்நாடு

கொள்ளையன் நாதுராம் கூட்டாளிகள் 4 பேர் கைது

கொள்ளையன் நாதுராம் கூட்டாளிகள் 4 பேர் கைது

webteam

கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான நாதுராமின் கூட்டாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடையில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்தை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடையின் மேற்கூரையில் துளையிட்டு கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து மேல்தளத்தில் இருந்தவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். வடமாநிலத்தை சேர்ந்தவர் அங்கு கடை நடத்தி வந்தது தெரியவந்தது. அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் வடமாநிலத்தை சேர்ந்த இருவர் பைகளை தூக்கி செல்வது பதிவாகி இருந்தது. அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் பாலியை சேர்ந்த நாதுராம், ஜோத்பூரை சேர்ந்த தினேஷ் சவுத்ரி என்பது தெரியவந்தது.

கொள்ளையர்களை தேடி தமிழகத்தில் இருந்து தனிப்படை காவலர்கள் ராஜஸ்தான் விரைந்தனர். ராஜஸ்தான் காவலர்கள் உதவியுடன் கொள்ளையர்கள் குறித்த தகவல்களை சேகரித்தனர். இந்நிலையில் 3 கொள்ளையர்கள் பதுங்கியிருப்பதாக தனிப்படை காவலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை நம்பி தனிப்படையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். ஆனால் அங்கு 10க்கும் மேற்பட்டவர்கள் இருந்துள்ளனர். அப்போது அவர்கள் தனிப்படை காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் கொள்ளையன் நாதுராம் துப்பாக்கியால் சுட்டதில் தமிழக காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து ராஜஸ்தான் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தினேஷ் சவுத்ரி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கைது செய்யப்பட்டார். தினேஷ் சிக்கிவிட்டதால், பெரியபாண்டியனை சுட்டுக்கொன்ற நாதுராமை விரைவில் பிடித்துவிட முடியும் என்று நம்பப்படுகிறது.

கொள்ளையன் நாதுராம் பதுங்குவதற்கு அடைக்கலம் கொடுத்ததாக தற்போது 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாதுராமின் கூட்டாளியான செங்கல்சூளை அதிபர் தேஜாராம், அவரது மனைவி பித்யா, மகள்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று கைதான மற்றொரு கொள்ளையன் தினேஷ் சவுத்ரியை சென்னை கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.