தமிழ்நாடு

“வாழ்க்கை வெறுத்து போய்விட்டது”: கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் எடுத்த விபரீத முடிவு

“வாழ்க்கை வெறுத்து போய்விட்டது”: கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் எடுத்த விபரீத முடிவு

kaleelrahman

சென்னை கொரட்டூரில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், அவர் எழுதிய மூன்று பக்கம் உருக்கமான கடிதம் சிக்கியது.

சென்னை அம்பத்தூரை அடுத்துள்ள கொரட்டூர் பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்தவர் ரேவதி (27). +2 வரை படித்துள்ள இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் நேற்று ரேவதி, அவருடைய தாய் மற்றும் சகோதரிகளுடன் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. பின்னர், அவர் வீட்டு படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொரட்டூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பொற்கொடி தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, தற்கொலை செய்து கொண்ட ரேவதி எழுதிய 3பக்க கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில், எனது அம்மாவிற்கு என்னை விட மற்ற இரு மகள்கள் மீது தான் அக்கறை, பாசம் அதிகம். அவர், என்னை மகளாக மதிப்பதில்லை. நான் எல்லோரையும் வெறுத்து விட்டேன். மேலும், எனக்கு வாழ்க்கை வெறுத்து போய்விட்டது. எனக்கு அனைவரும் இருந்தும் இல்லாத ஒன்று தான். எனக்கு யாருமில்லை, நான் அனாதையாக இருந்தேன். எனது சாவுக்கு பிறகு, என் முகத்தை குடும்பத்தினர் யாரும் பார்க்கக்கூடாது. இவ்வாறு, ரேவதி எழுதி உள்ளார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.