தமிழ்நாடு

சென்னை: குழந்தை இல்லாத விரக்தியில் மூத்த தம்பதியர் எடுத்த விபரீத முடிவு

சென்னை: குழந்தை இல்லாத விரக்தியில் மூத்த தம்பதியர் எடுத்த விபரீத முடிவு

kaleelrahman

குழந்தை இல்லாத விரக்தியில், மன உளைச்சலில் இருந்த மூத்த தம்பதியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மடிப்பாக்கம் அடுத்த கீழ்கட்டளை, டாக்டர் ராமமூர்த்தி நகர் இரண்டாவது பிரதான சாலையைச் சேர்ந்தவர்கள் நம்பிராஜன் (76), பாப்பா (76) தம்பதியர். இவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக அங்கு வசித்து வந்த நிலையில், இவர்கள் தங்களுக்கு குழந்தை இல்லாத விரக்தியில் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மதியம் நம்பிராஜனின் சகோதரர் சுப்பிரமணி என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டபோது அழைப்பை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த சகோதரர் இரவு வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. இதனால் ஜன்னல் வழியாக பார்த்தபோது நம்பிராஜன் வீட்டின் வரவேற்பறையிலும், மனைவி பாப்பா படுக்கையறையிலும் தூக்கிட்ட நிலையில் தொங்கிக் கொண்டிருந்தனர்.

இதையடுத்து மடிப்பாக்கம் போலீசார் உதவியுடன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடல்நிலை சரியில்லாததாலும், குழந்தைகள் இல்லாமல் தனிமையில் இருந்ததாலும் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என அவரது சகோதரர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தற்கொலைஎன்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)