தமிழ்நாடு

‘காவல் ஆய்வாளர் மிரட்டுகிறார்’- சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சின்னத்திரை நடிகை புகார்

‘காவல் ஆய்வாளர் மிரட்டுகிறார்’- சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சின்னத்திரை நடிகை புகார்

kaleelrahman

தங்கையின் ஆடையை கிழித்து மானபங்கம் செய்தவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற, காவல் ஆய்வாளர் மிரட்டுவதாக சின்னத்திரை நடிகை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து வீடியோ ஆதாரத்தை சமர்ப்பித்தார்.

வானத்தை போல, செம்பருத்தி உள்ளிட்ட பல டிவி தொடர்களில் துணை நடிகையாக நடித்து வருபவர் மணலியை சேர்ந்த ஜெனிபர் (24). இவர் சரவணன் என்பவரை திருமணம் செய்தார். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் டிவி தொடர்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வரும் நவீன்குமார் என்பவருடன் ஜெனிபருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முதல் திருமணம் விவாகரத்து செய்யப்பட்ட பிறகு 2-வது திருமணம் செய்ய ஜெனிபர் முடிவு செய்திருந்தார்.

இந்நிலையில் நவீன்குமார் லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டியதால் அவருடன் பழகுவதை ஜெனிபர் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து கடந்த 18ஆம் தேதி, ‘நவீன்குமார் அவரது பெற்றோர், நண்பன் கார்த்திக் மற்றும் அடையாளம் தெரியாத 3 பேர், ஜெனிபர் கார் கண்ணாடியை உடைத்து அனைவரையும் காரில் இருந்து இழுத்து உதைத்துள்ளனர். எனது தந்தையை தாக்கியதோடு அவரின் தங்கையின் ஆடையை; நவீன்குமார், கார்த்தி ஆகியோh கிழித்து மானபங்கம் செய்தார்கள்’ என மணலி காவல் நிலையத்தில் ஜெனிபர் புகார் அளித்தார்.

இது தொடர்பாக நவீன்குமார், அவரது பெற்றோர், நண்பர் கார்த்தி ஆகியோர் மீது மணலி போலீசார் பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் நடிகை ஜெனிபர் இன்று சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜெனிபர் கூறுகையில், 'நவீன் குமாருக்கு வேலை பறிபோனதால் செலவுக்காக தன்னிடம் இருந்து ரூ. 2.5 லட்சம் வரை பணத்தை கடனாக பெற்று கொண்டார். மீண்டும் ரூ. 5 லட்சம் ரூபாய் கடனாக வேண்டும் என கேட்டார்.

இதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால் தன்னை அடித்து காரில் ஏற்றி கொண்டு அரை நிர்வாணப்படுத்தி செல்போனில் வீடியோ எடுத்து துன்புறுத்தினார். பிறகு காரிலேயே சென்னை முழுவதும் சுற்றி அடித்து துன்புறுத்தினார். மேலும் 5 லட்சம் ரூபாய் தரவில்லையென்றால் அரை நிர்வாண வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவதாக தொடர்ந்து மிரட்டி வந்தார். கடந்த 18ஆம் தேதி தனது தந்தை, தங்கையுடன் காரில் சென்ற போது நவீன்குமார், அவரது தந்தை உதயகுமார், தம்பி பிரவீன்குமார் ஆகியோர் இணைந்து காரை வழி மறித்து தனது தந்தையை சரமாரியாக தாக்கிவிட்டு, தங்கையின் உடையை கிழித்து மானபங்கபடுத்தினர்.

இது தொடர்பாக மணலி காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது நவீன்குமார் தந்தை உதயகுமார் காவல்துறையில் அமைச்சு பணியாளராக பணிபுரிவதால் காவல் ஆய்வாளர் சிட்டிபாபு தன் மீது விபச்சார வழக்கு போட்டுவிடுவதாக மிரட்டுகிறார். பின்னர் தாக்கிய வீடியோ ஆதாரங்கள் தங்களிடம் இருந்ததால் ஆய்வாளர் சிட்டிபாபு உதயகுமாரை தவிர்த்து எளிதில் வெளிவரக்கூடிய வழக்குகளை பதிவு செய்து நவீன்குமார், பிரவீன்குமார், கார்த்திக் ஆகியோரை சிறைக்கு அனுப்பி தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.

மேலும் வழக்கை உடனடியாக வாபஸ்பெற வேண்டுமென்று தொடர்ந்து உதயகுமார், ஆய்வாளர் சிட்டிபாபு ஆகியோர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், தனது தங்கையை மானபங்கபடுத்திய வீடியோ ஆதாரங்களை வழங்கியும் ஆய்வாளர் சிட்டிபாபு மிரட்டி வருகிறார். உடனடியாக அமைச்சு பணியாளர் உதயகுமார், நவீன்குமார், பிரவீன்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளளேன்' என்று கூறினார்.