இன்ஸ்டா ரீல்ஸ் freepik - மாதிரிப்படம்
தமிழ்நாடு

சென்னை: ‘எவ்வளவு நேரம்தான் ரீல்ஸ்?’ - மகளை கண்டித்த தாய்.. 12ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு!

சென்னை மதுரவாயல் அருகே படிக்காமல் செல்போனில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்த 12ஆம் வகுப்பு மாணவியை, தாய் கண்டித்த நிலையில், அம்மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

webteam

செய்தியாளர்: ஆவடி நவீன்குமார்

சென்னை மதுரவாயல் அருகே உள்ள இந்திராகாந்தி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ருதிலயா (17). இவர் விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வழக்கம்போல இவரது தாய் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், தனது தம்பியுடன் மாணவி ஸ்ருதிலயா வீட்டில் இருந்துள்ளார்.

Police station

இரவு மாணவியின் தாய் வேலை முடித்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மாணவியின் அறை நீண்ட நேரமாக சாத்தியிருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த தாய், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் அங்கு சென்ற மதுரவாயல் காவல் நிலைய போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைவிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரனையில் ‘12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாணவி படிக்காமல், செல்போனில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்ததை தாய் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி, தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்’ என தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.