தமிழ்நாடு

போக்குவரத்து நெரிசலில் திணறும் வாகன ஓட்டிகள் - கோயம்பேடு பாலப்பணிகள் எப்போது முடியும்?

போக்குவரத்து நெரிசலில் திணறும் வாகன ஓட்டிகள் - கோயம்பேடு பாலப்பணிகள் எப்போது முடியும்?

kaleelrahman

சென்னை கோயம்பேட்டில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் 2019ஆம் ஆண்டிலேயே முடிந்திருக்க வேண்டிய நிலையில், இரண்டு ஆண்டுகளை கடந்தும் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.

கோயம்பேடு பேருந்து நிலையம், மெட்ரோ நிலையம், காய்கறி மார்க்கெட், ஆம்னி பேருந்து நிலையம் என சென்னையின் மையமாக இருக்கும் இடத்தில் வாகன நெரிசலை குறைக்க உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்நிலையில், 2017ஆம் ஆண்டு 93 கோடி ரூபாய் செலவில் 1.3 கிலோ மீட்டர் நீளத்தில் மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது.

இதையடுத்து 2019 டிசம்பரில் முடித்திருக்க வேண்டிய பாலப்பணிகள் தொடர்ந்து மந்தமாக நடக்கும் காரணத்தால், இந்த பகுதியை கடக்கும் மக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாவதாக கூறுகின்றனர். சென்னையில் வாகன நெரிசலை குறைக்க 1990 ஆம் ஆண்டுக்குப் பிறகு மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 2004-க்குப் பிறகு 35 புதிய மேம்பாலங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. இன்றைய சூழலில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 3 கோடி வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. கோயம்பேடு உயர்மட்ட மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்தால், வாகன நெரிசல் பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, கொரோனா காலம் என்பதால் கடந்த ஆண்டு மேம்பால பணிகளில் தாமதம் ஏற்பட்டதாகவும், நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து காவலர்கள் பணியில் இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். 90 சதவிகித பணி முடிந்திருக்கும் நிலையில், ஒரு மாதத்தில் முழுமையாக முடிந்துவிடும் எனவும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.