பெரம்பூர் பகுதியில் வடிந்த தண்ணீர் pt desk
தமிழ்நாடு

“எங்கள் வாழ்க்கையை பார்த்தால் எங்களுக்கே பரிதாபமாக உள்ளது” – மழையால் பாதிக்கப்பட்ட பெரம்பூர் மக்கள்!

ஜெ.அன்பரசன்

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னைக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை சென்னையில் கனமழை பெய்து வந்தது. இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் இரண்டு அடியிலிருந்து மூன்று அடி உயரம் வரை சூழ்ந்திருந்தது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. நேற்று மாலை முதல் மழை பெய்வது சற்று நின்ற நிலையில் பல்வேறு இடங்களில் தேங்கியிருந்த மழை நீர் வடியத் தொடங்கியுள்ளது.

பெரம்பூர் பகுதியில் வடிந்த தண்ணீர்

இந்நிலையில், பெரம்பூர் மேட்டுப்பாளையம் பகுதியில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு இருப்பவர்கள் கூலி வேலை செய்து தங்களது வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை பெய்த கனமழையில் சுமார் 4.5 அடி உயரத்திற்கு இப்பகுதிகள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் இப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்குள்ளே தண்ணீர் புகுந்தது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் பெரம்பூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு முழுவதும் அரசுப் பள்ளியில் தங்கியிருந்த காஞ்சனா என்ற மூதாட்டி இன்று காலை தனது வீட்டை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது தனது வீட்டினுள் தண்ணீர் புகுந்திருப்பதையும், வீட்டினுள் இருந்த பொருட்கள் முழுவதுமாக சேதமடைந்ததையும் பார்த்ததும் கண்ணீர் வடித்தார்.

காஞ்சனா

கிருஷ்ணமூர்த்தி என்ற குடும்பத் தலைவர் இதுபற்றி நம்மிடையே பேசிய போது., “எங்கள் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சேதமடைந்து விட்டது. சுமார் 15, 20 ஆண்டுகாலம் கஷ்டப்பட்டு ஒவ்வொரு ரூபாயாக சேர்த்து வாங்கிய டிவி, ஃபிரிட்ஜ், கட்டில், மேஜை, ஃபேன் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் பழுதடைந்து விட்டது. இனி இதனை மீண்டும் வாங்குவதற்கு ஆறு மாதமோ அல்லது ஒரு வருடம் கூட ஆகலாம்; என்று கூறியவர், எங்களின் வாழ்க்கையை பார்ப்பதற்கு எங்களுக்கே பரிதாபமாக உள்ளது” என வருத்தத்துடன் தெரிவித்தார்.

இவரைத் தொடர்ந்து நம்மிடம் பேசிய மணிகண்டன் என்ற இளைஞர்., “அரசிடம் இருந்து உணவு, மளிகை பொருட்கள் உள்ளிட்ட எந்த நிவாரண பொருட்களும் எங்களுக்கு வேண்டாம். ஒவ்வொரு ஆண்டும் இதே போல வெள்ளம் வருவதும் பின்பு அரசு சார்பில் நிவாரண பொருட்கள் என்ற பெயரில் பணம் மற்றும் காய்கறி, மளிகை பொருட்கள் வழங்குவதும் வாடிக்கைதான். இவையெல்லாம் எங்களுக்கு வேண்டாம். எங்களுக்கு தேவை நிரந்தரத் தீர்வு வேண்டும். எங்கள் பகுதியைச் சுற்றி முழுமையான மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். இதை செய்தாலே மழையை சமாளிக்க எங்களுக்கு தைரியமும் வழியும் கிடைத்துவிடும்” என்று தெரிவித்தார்.

தாமோதரன்

மழை நின்றிருக்கலாம்; தண்ணீரும் வடிந்திருக்கலாம். ஆனால், இதனால் ஏற்பட்ட பாதிக்களிலிருந்து மீண்டு வர குறைந்தது ஒரு வருடம் ஆகும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.