போலி ஆவணங்கள் மூலம் ஊடகவியலாளர்கள் மீது அவதூறு பரப்பியதாக யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
தங்கள் நோக்கங்களுக்கு வளைந்து கொடுக்காத பத்திரிகையாளர்களை மிரட்டி அச்சுறுத்துவதும், அவர்களைப் பற்றியும், அவர்களது குடும்பத்தினரைப் பற்றியும் இழிவாக பேசுவதுமான போக்கு ஆரோக்கியமானது அல்ல என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்களை அவர்களது பணியில் இருந்து விலக்குவதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் மிரட்டல் விடுக்கும் போக்கை எவர் ஒருவர் முன்னெடுத்தாலும் அத்தகைய போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும் பத்திரிகையாளர் மன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
சமூக விரோத சக்திகளிடமிருந்து ஊடக சுதந்தரத்தை பாதுகாக்கும் வகையில் தனிநபர்கள், அரசியல் கட்சியினர் என அனைவரது செயல்பாடும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.