சென்னை துறைமுகம் நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதியில் சாதனை படைக்கும் பாதையில் உள்ளது.
நாட்டின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றான சென்னை துறைமுகம், ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, வடக்கு மற்றும் தென்அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் முக்கியப் பொருட்கள் தலைநகர் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்படுபவை.
ஹூண்டாய் மற்றும் கியா கார் நிறுவனங்கள் மட்டும் ஆண்டுதோறும் 1.7 லட்சம் கார்களை சென்னை துறைமுகத்தில் இருந்து ஆப்ரிக்கா, வளைகுடா நாடுகள், மெக்சிகோ, பெரு, பனாமா, தென் ஆப்ரிக்கா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. இதைத் தொடர்ந்து ஐசிஎப்-பில் தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகள் மற்றும் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் முக்கிய அங்கம் வகிக்கின்றன.
ஏற்றுமதி மட்டும் அல்லாமல், எஃகு, சோளம், பருப்பு வகைகள், ஜிப்சம், சமையல் எண்ணெய் இறக்குமதியையும் சென்னை துறைமுகம் கையாள்கிறது. கொரோனா பொதுமுடக்கத்துக்கு முன்பிருந்தததுபோலவே, பல கார் உற்பத்தியாளர்களும் மற்ற வணிகங்களும் தொடங்கியுள்ளதால், நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதி 4.8 மில்லியன் டன்களை தாண்டும் என்று சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார். எண்ணூர் காமராஜர் துறைமுகம் இந்த ஆண்டு ஏற்றுமதியை கையாள்வதில் 51 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளதாகவும் சுனில் பாலிவால் தெரிவித்தார்.