தமிழ்நாடு

சென்னை: ஆண் நண்பர்களுடன் சுற்றிய சிறுமியை மீட்டு அவரது தந்தையிடம் ஒப்படைத்த போலீசார்

சென்னை: ஆண் நண்பர்களுடன் சுற்றிய சிறுமியை மீட்டு அவரது தந்தையிடம் ஒப்படைத்த போலீசார்

kaleelrahman

சென்னையில் ஆண் நண்பர்களோடு பள்ளி வளாகத்தில் நிறுத்தியிருந்த பேருந்தில் தங்கியிருந்த 14 வயது சிறுமி டிக்டாக் செய்வதற்காக வழிப்பறி குற்றவாளியோடு இரவு நேரத்தில் ஊர் சுற்றியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சென்னை புரசைவாக்கம் தாண்டவன் தெருவைச் சேர்ந்தவர் கோட்டீஸ்வரன். இவர், அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி ஏ பிளாக்கில் உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை எடுக்கச் சென்றுள்ளார். அப்போது பேருந்தின் உள்ளே நான்கு பேர் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அவர்களை பிடிக்க முயன்றுள்ளார்.

அதில், மூன்று பேர் தப்பியோடிவிட ஒருவரான சிறுமியை மட்டும் பிடித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் சிறுமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர், சென்னை ராயப்பேட்டை மீர்சாகிப் பேட்டையைச் சேர்ந்த 16 வயது சிறுமி என்பதும் தனது நண்பர்களான கார்த்திக், நிஜாம் மற்றும் தேவா ஆகியோர்களுடன் டிக்டாக் செய்வதற்காக இரவு நேரத்தில் ஈசிஆர் சென்று விட்டு திரும்பி வரும்போது பள்ளியின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து பள்ளிக்கு சொந்தமான பேருந்தில் டிக்டாக் செய்து விட்டு தூங்கிவிட்டதாகவும், காவலாளி வந்து பார்த்தபோது தன்னுடன் இருந்த மூன்று நண்பர்களும் ஓடி விட்டதாகவும் சிறுமி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

ராயப்பேட்டை மீர்சாகிப் பேட்டை பகுதியில் சாலையோரமாக தனது தந்தையுடன் வசித்துவரும் சிறுமி, அங்குள்ள சிலருடன் பழக்கம் ஏற்பட்டு கஞ்சா போதைக்கு அடிமையாகி இருந்ததாக தெரிகிறது. மீர்சாகிப் பேட்டை பகுதியைச் சேர்ந்த 3 ஆண் நண்பர்களுடன் சுற்றிவந்த சிறுமி, ஆண் போலவே இருப்பதால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை எனக் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு சிறுமி, தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து பைக்கில் சுற்றி உள்ளார். அப்போது விருகம்பாக்கத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த் போலீசாரிடம் அவர்கள் சிக்கிக் கொண்டனர்.

இதைத்தொடர்ந்து விருகம்பாக்கம் போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட தேவா மீது குற்ற வழக்கு இருப்பது தெரியவந்தது. தேவா சில நாட்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில வெளியே வந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார். இதையடுத்து அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து மறுநாள் காலை வரும்படி அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து அங்கிருந்து சென்ற சிறுமி உட்பட 4 பேரும் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியின் சுவர் ஏறி குதித்து, கஞ்சா போதையில் பேருந்துலேயே தூங்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அப்போது காவலாளியை தாக்கி விட்டு 3 பேர் தப்பியோடிய நிலையில், சிறுமி மட்டும் சிக்கிக் கொண்டார்.

இந்நிலையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை எதுவும் தரப்படவில்லை என்பதை உறுதிபடுத்திய அரும்பாக்கம் போலீசார், திருச்சியில் உள்ள சிறுமியின் தந்தையை வரவழைத்து விசாரணை நடத்தினர். பிறகு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மூலம் சிறுமியை தந்தையிடம் ஒப்படைத்த போலீசார் அவர்களை திருச்சிக்கு அனுப்பி வைத்து தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.