தமிழ்நாடு

போலீஸ்காரனா? பிச்சைக்காரனா? புலம்பும் போலீஸ்கள்!

போலீஸ்காரனா? பிச்சைக்காரனா? புலம்பும் போலீஸ்கள்!

webteam

சென்னை கிண்டியில் வி.ஐ.பி ஒருவரின் பாதுகாப்பு பணிக்கு சென்ற காவல்துறையினர் தங்க இடமின்றி சாலை ஓரத்தில் தூங்கியுள்ளனர்.

இதுதொடர்பாக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ள காவலர் ஒருவர், “ ஃப்ரெண்ட்ஸ் எல்லோருக்கும் வணக்கம். ஒரு வி.ஐ.பி-யின் பாதுகாப்புப் பணிக்காகக் கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு வந்தோம். சம்பந்தப்பட்ட வி.ஐ.பி எங்களுக்கு போலீஸ் பாதுகாப்புத் தேவையில்லை என்று கூறிவிட்டார். ஆனால் போலீஸ் அதிகாரிகள் எங்களை அங்கேயே பாதுகாப்புப் பணியில் இருக்கும்படி தெரிவித்துவிட்டனர்.

இதனால் ஹோட்டல் வாசல் முன்பு வாகனத்தைக்கூட நிறுத்த வசதியில்லாமல், நடுரோட்டில் நிற்கிறோம். 10வது மாடியிலிருக்கும் வி.ஐ.பி-க்கு எதற்கு நடுரோட்டில் பாதுகாப்புக்காகப் போலீஸார் நிற்க வேண்டும். 

இந்த ஹோட்டலில் பாதுகாப்புப் பணிக்கு வரும் போலீஸாருக்கு இதே நிலை தான் தொடர்ந்து வருகிறது. இந்தப் பிரச்னை இந்த ஹோட்டலில் மட்டுமல்ல. எல்லா இடங்களிலும் இருக்கிறது. ஹோட்டல் நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘காவல்துறையிலிருந்து எந்தத் தகவலும் எங்களுக்கு வரவில்லை. தங்குவதற்கு ஏற்பாடு செய்யும்படி தெரிவித்தால் ஏற்பாடு செய்துதருகிறோம்' என்று தெரிவித்துவிட்டனர்.


போலீஸ்ன்னா பிச்சைக்காரனா? இல்ல நாயா? ஹோட்டல் நிர்வாகம், வி.ஐ.பி-யைத் தங்கவைத்து பணம் சம்பாதிக்கிறது. அதற்கு நாங்கள் பாதுகாப்புக் கொடுக்கிறோம். இரவு நேரத்தில் பணி முடிந்து எப்படி போலீஸார் வீட்டுக்குச் செல்வார்கள்? எனவே இதை எல்லோருக்கும் ஷேர் செய்யுங்கள். நியாயம் கிடைக்க வேண்டும்'' என்று புலம்பியுள்ளார். இது ஒரு போலீஸின் புலம்பல் அல்ல, இதுபோல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அனைத்து காவலர்களின் குரலாக கருதப்படுகிறது.