தமிழ்நாடு

மாறுவேடத்தில் ஸ்கெட்ச் : கொள்ளையர்களை ‘கோழி’போல் அமுக்கிய போலீஸ்

மாறுவேடத்தில் ஸ்கெட்ச் : கொள்ளையர்களை ‘கோழி’போல் அமுக்கிய போலீஸ்

webteam

சென்னை வீடு புகுந்து திருடிய கொள்ளையர்களை காவல்துறையினர் மாறுவேடத்தில் திட்டமிட்டு கைது செய்தனர்.

சென்னை ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, அபிராமிபுரம், கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இந்த கொள்ளை சம்பவம் பெரும்பாலும் இரவு நேரங்களில் மட்டுமே நடைபெற்று வந்தது. இதுதொடர்பாக அப்பகுதிகளின் காவல்நிலையங்களில் புகார்கள் குவிய, அபிராமிபுரம் காவல்நிலைய உதவி ஆணையர் சுதர்சனம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படையினர், கொள்ளை நடைபெற்ற வீடுகளின் அருகே இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில் பெரியளவு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் கருப்பு நிற கார் ஒன்று நிற்கும் காட்சிகள் மட்டும் இருந்தது. அதைக்கொண்டு விசாரணையை தொடங்கிய காவல்துறையினர், அதேபோன்ற கார்களை தேடத்தொடங்கினர். கார்கள் விற்கும் இணையதளம் ஒன்றில், அதேபோன்ற ஒரு கார் ஒன்று விற்பனைக்கு இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. விளம்பரத்தை வெளியிட்டிருந்த நபரிடம், கார் வாங்கும் நபர் போல சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த நபர் தனது காரை ஏற்கனவே விற்றுவிட்டதாக கூறியுள்ளார். விற்கப்பட்ட நபர்களின் விவரங்களை கேட்க, அந்த நபர் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தாங்கள் காவல்துறையினர் எனக்கூறி விசாரித்த தனிப்படையினர், காரை வாங்கியவர்களின் தொலைபேசி எண்ணை பெற்றுள்ளனர்.

அந்த தொலைபேசி எண்ணை ஆய்வு செய்தபோது, அது காஞ்சிபுரத்தில் இருப்பதாக காட்டியுள்ளது. இதையடுத்து காஞ்சிபுரம் விரைந்த காவல்துறையினர், காரை விற்ற நபர் கூறிய அடையாளங்களைக் கொண்டு, வாங்கியவர்களை தேடினர். காவல்துறையினராக தேடினால் கொள்ளையர்கள் தப்பிக்கூடும் என்பதால், சாலை அமைக்கும் பணி செய்பவர்கள் போல விசாரித்தனர். அப்போது மாரிமுத்து என்பவரிடம் விசாரித்தபோது, அவரது பேச்சு சந்தேகத்தை தூண்டும்படி இருந்துள்ளது. இதையடுத்து உடனே அவரை கைது செய்த தனிப்படையினர், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். தனிப்படையினரின் விசாரணையில் அவர் தாங்கள் தான் அந்தக் கொள்ளையர்கள் என்பதை ஒப்புக்கொண்டார். அத்துடன் தன்னுடன் சேர்ந்து சிவா மற்றும் ராஜேஸ் என்பவர்களும் கொள்ளையில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார்.

அவர்கள் இருவரும் தற்போது சென்னையில் இருப்பதாகவும், மாலை நேரத்தில் சைதாப்பேட்டையில் உள்ள ஸ்நாக்ஸ் கடை ஒன்றில் கூடி கொள்ளை குறித்து திட்டமிடுவார்கள் என்றும் மாரிமுத்து தெரிவித்துள்ளார். சைதாப்பேட்டை ஸ்நாக்ஸ் கடைக்கு சென்ற தனிப்படையினர், அங்கு பிரெட் ஆம்லட் போடும் மாஸ்டர் போல வேடமிட்டு கொள்ளையர்களுக்காக காத்திருந்துள்ளனர். அவர்கள் நினைத்ததுபடியே, இரண்டு கொள்ளையர்களும் வர, உடனே அவர்களை கோழி அமுக்குவதுபோல அமுக்கிப்பிடித்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், திருட்டுத் தங்கத்தை விற்க உதவிய நாகூர் மீரான் என்பவரையும் கைது செய்தனர். அத்துடன் அந்தக் கொள்ளைக் கும்பலிடம் இருந்து 2 கிலோவிற்கும் மேற்பட்ட வெள்ளி மற்றும் 50 சவரனுக்கும் மேற்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்தனர். மாறுவேடம் இட்டு கொள்ளையர்களை சாமர்த்தியமாக பிடித்த தனிப்படையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.