தமிழ்நாடு

வாட்ஸ்-அப் வதந்திகளால் நேர்ந்த கொடுமை : மூதாட்டி அடித்துக்கொலை!

வாட்ஸ்-அப் வதந்திகளால் நேர்ந்த கொடுமை : மூதாட்டி அடித்துக்கொலை!

webteam

திருவண்ணாமலையில் குழந்தை கடத்தும் நபர்களோ என்ற சந்தே‌கத்தின் அடிப்படையில் மூதாட்டி ஒருவரை பொதுமக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னையைச்‌ சேர்ந்த ருக்மணி என்ற மூதாட்டி குடும்பத்துடன் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே அத்திமூரிலுள்ள குலதெய்வ கோவிலுக்குச் சென்றுள்ளார். அங்கே குடும்பத்துடன் அவர்கள் நின்றுகொண்டிருந்த போது, கிராமத்தின் தெருவில் சில குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்துள்ளன. அந்த குழந்தைகளை கண்ட மூதாட்டி, குழந்தைகளை அழைத்து சாக்லேட் கொடுத்துள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், ருக்மணி குடும்பத்தினரை குழந்தை கடத்தும் கும்பலோ என்று சந்தேகித்துள்ளது. 

அதற்குள் கூட்டம் கூட, சந்தேகமடைந்த ஊர்மக்கள், ருக்மணி குடும்பத்தினர் 5 பேரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். வலியால் அவர்கள் துடித்த ருக்மணி தாங்கள் குழந்தை கடத்தும் கும்பல் இல்லை என்பதை கூறியுள்ளனர். ஆனால் கூட்டமாக தாக்கிய மக்கள், அவர்கள் கூறியதை காதுகொடுத்துக் கேட்காமல் தொடர்ந்து தாக்கியுள்ளனர். இதில் மூதாட்டி ருக்மணி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த 2 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. 

இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க 4 தனிப்படைகள் அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி உத்‌தரவிட்டுள்ளார். அத்துடன், இது குறித்து கொலை வழக்கு பதிவு செய்யப்படவுள்ளதாகவும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொன்னி தெரிவித்துள்ளார். மேலும் சந்தேகத்திற்கிடமான நபர்களை கண்டால் தாக்க வேண்டாம் என்றும், காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கவும் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. க‌டந்த ஒருவாரமாக இது குறித்து பல மாவட்டங்களில் காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும்‌ நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.