மனிதர்களின் போட்டோவைக் கொண்டு அவர்கள் போலவே சிறிய பொம்மை செய்யும் கலைஞர்களுக்கு சென்னை மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த ‘மை க்யூட் மினி’ என்ற இணையவழி அங்காடியினர், ‘ரெப்லிகா டால்ஸ்’ (Replica Dolls) என்று சொல்லக்கூடிய சிறிய அளவிலான பொம்மைகளைச் செய்வதில் திறமை காட்டுகிறார்கள். ஒரு நபரின் புகைப்படத்தை மட்டும் கொடுத்துவிட்டால் போதும். அந்த நபரைப் போலவே மெய்நிகர் பொம்மையாக வடித்து தருகிறார்கள்.
இந்த இணையவழி அங்காடியின் நிறுவனரான ஹரிச்சரண், சிறு வயதிலிருந்தே ஓவியங்கள், சிற்பங்கள் செதுக்குதல் மீதான ஆர்வத்தால், தனது ஐ.டி வேலையையும் விடுத்து இதனை முழுநேரத் தொழிலாக கையிலெடுத்திருக்கிறார்.
பொம்மையாக செய்யப்பட வேண்டியவரின் முகம் தெளிவாகத் தெரியுமொரு புகைப்படம்தான் இவர்களுடைய பணிக்கு முக்கியத் தேவை. அவர்களின் சரும நிறம், கண்ணின் நிறம், தலைமுடியின் நிறம், என்ன உடை அணிந்திருக்க வேண்டும் உட்பட அனைத்து விவரங்களையும் பெற்ற பின்பே சிலையாக செய்யத் தொடங்குகின்றனர்.
ஒருவித ‘பாலிமர் க்ளே’ கொண்டு செய்வதால் இந்தப் பொம்மைகள் உடையாது என்பது கூடுதல் சிறப்பாக உள்ளது.