தமிழ்நாடு

''நிலாவில் தண்ணீர் கிடைத்தால் முதலில் எங்களுக்குச் சொல்லுங்கள்'' - சென்னை மெட்ரோ வாட்டரின் நகைச்சுவை

webteam

'நிலவில் தண்ணீர் கிடைத்தால் முதலில் எங்களுக்குச் சொல்லுங்கள்' என இஸ்ரோவுக்கு சென்னை மெட்ரோ வாட்டர்  நகைச்சுவையான வேண்டுகோளை விடுத்துள்ளது

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது. ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம் நேற்று மதியம் சரியாக 2.43 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என அனைவரும் வாழ்த்து  தெரிவித்து வருகின்றனர். பலரும் ட்விட்டரில் இஸ்ரோவை புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சென்னை மெட்ரோ வாட்டர், சென்னையின் தண்ணீர் பஞ்சத்தையும் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சென்னை மெட்ரோ வாட்டர், ''இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். நாங்கள் புதிய நீர்நிலைகளை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். ஒருவேளை நிலவில் நீங்கள் தண்ணீரை கண்டுபிடித்தால், முதலில் யாருக்கு தெரிவிக்க வேண்டும் என்று தெரியும் தானே?'' என்று நகைச்சுவையாக தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ வாட்டரின் இந்த ட்வீட்டுக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ''உங்களின் நகைச்சுவை திறன் பாராட்டக்குரியது என்றாலும், இருக்கும் நீர்நிலைகளை பாதுகாக்க முதலில் நடவடிக்கை எடுங்கள்'' என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்