சென்னை மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் இன்றும் இலவசமாக பயணம் செய்யலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை டி.எம்.எஸ் - வண்ணாரப்பேட்டை இடையே புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை கடந்த 10ம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் நேற்று இரவு வரை இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. பொதுமக்களிடையே மெட்ரோ ரயில் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த இலவச பயண அறிவிப்பை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டது. இதனையடுத்து சிறுவர்கள் பெரியவர்கள் என ஏராளமானோர் நேற்று மெட்ரோ ரயிலில் பயணம் செய்து மகிழ்ந்தனர்.
இதனிடையே சைதாப்பேட்டை - சின்னமலை இடையே உயர் மின் அழுத்த மின்கம்பியில் ஏற்பட்ட பழுதால் ரயில்சேவை மதியம் 12மணி வரை பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். கோளாறு மீண்டும் சரிசெய்யப்பட்டு மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது. நேற்று மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ததாகவும், பொதுமக்களின் ஆர்வத்தை அடுத்து இன்றும் சென்னை மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதே போல் கடந்த ஆண்டு சின்னமலை, தேனாம்பேட்டை போன்ற வழித்தடங்களில் 5 நாட்கள் இலவச பயணம் அறிவிக்கப்பட்டது. அப்போது 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது