தமிழ்நாடு

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிக கனமழை : வானிலை எச்சரிக்கை

webteam

கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வரலாறு காணாத கன மழையால் கோழிக்கோடு, இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், “நேற்று வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த பகுதி, சற்று வலுவடைந்து தொடர்ந்து அதே பகுதியில் நீடிக்கிறது. இதுமேலும் காற்றுழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் மேற்கு திசைக்காற்றின் வலு மேலும் அதிகரிக்கக்கூடிய நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் மலைப்பகுதிகள் அடங்கிய மாவட்டங்களான கோவை, நீலகிரி, நெல்லை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும். தமிழகம் மற்றும் புதுவையின் இதர பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தரவரையில், “வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு முறை லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்கள் வடக்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளுக்கு அடுத்த இரு தினங்களுக்கு செல்ல வேண்டாம்” என்று அறிவுறுத்தினார்.