சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு 11 மணி வரை இடியுடன் கூடிய கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, கிண்டி, நுங்கம்பாக்கம், கோடப்பாக்கம், எழும்பூர், அம்பத்தூர், ராயபுரம், போரூர், வளசரவாக்கம், ஆவடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அத்துடன் கும்மிடிப்பூண்டி, புழல், செங்குன்றம், குன்றத்தூர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை இரவு 11 மணி வரை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பெய்த வடகிழக்கு பருவமழையால் சென்னையின் பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக மீஞ்சூர் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் கனமழை பெய்து வருவது மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த மழை தொடர்ந்தால் மீண்டும் பல இடங்களில், வீடுகளுக்குள் தண்ணீர் புகும் நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. அதேசமயம் கனமழை பெய்தால் அதை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக இன்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.