மேயர் பிரியா - விஷால் புதிய தலைமுறை
தமிழ்நாடு

“அரசியல் செய்ய முயலாமல் கோரிக்கை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும்”- விஷாலுக்கு மேயர் பிரியா பதில்!

ஜெ.நிவேதா

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக பெய்த அதி கனமழையால், பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில், மக்களுக்கு தைரியம் கொடுக்கும் விதமாக மக்கள் பிரதிநிதிகள் களத்தில் இறங்கி செயல்பட வேண்டும் என நடிகர் விஷால் வலியுறுத்தி இருந்தார்.

அண்ணாநகரில் உள்ள தனது வீட்டில் தண்ணீர் தேங்கிய நிலையில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், நடிகனாக இல்லாமல், ஒரு வாக்காளராக இந்த கோரிக்கையை முன்வைப்பதாக தெரிவித்துள்ளார்.

சென்னை மேயர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோரை டேக் செய்து X வலைதளத்தில் பேசிய அவர், “நீங்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள், மின் துண்டிப்பு எதுவும் இல்லாத இடத்தில் பாதுகாப்பாகவும் சௌகர்யமாகவும் இருப்பீர்கள் என நம்புகிறேன். ஆனால் நீங்கள் வாழும் அதே இடத்தில் வாழும் எங்களை போன்ற மக்கள், அப்படியான சூழலில் இல்லை. 2015-ல் களத்தில் இறங்கி நாங்கள் பணிசெய்தோம். 8 வருடங்களுக்கு பின், நிலைமை இன்னும் மாறவில்லை. இன்னும் மோசமாகத்தான் உள்ளது. வடிகால் பணிகளெல்லாம் என்ன ஆனது?

இப்போதும் களத்தில் இறங்கி பணி செய்ய நாங்கள் தயார். இருப்பினும் மக்களுக்கு தைரியம் கொடுக்கும் விதமாக மக்கள் பிரதிநிதிகள் களத்தில் இறங்கி செயல்பட வேண்டும்.

வெட்கித்தலை குனிந்துதான் இதை நான் எழுதுறேன். நான் சொல்வது எதுவும் நடக்காத காரியம் இல்லை. எல்லாமே மக்களுக்கு நீங்கள் செய்ய வேண்டிய பணிதான்” என்று கடுமையாக கூறியிருந்தார்.

Chennai Mayor Priya

இந்நிலையில் விஷாலுக்கு சென்னை மேயர் பிரியா X வலைதளம் மூலமாக பதிலளித்துள்ளார். அதில் அவர், “அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் களத்தில் நின்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் செய்து வருகிறார்கள்.

அரசியல் செய்ய முயலாமல் கோரிக்கை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும். அரசு நிறைவேற்றித் தரும்!” என்றுள்ளார்.