தமிழ்நாடு

பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்து வந்த பெண்ணுக்கு வீட்டில் அதிர்ச்சி!

பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்து வந்த பெண்ணுக்கு வீட்டில் அதிர்ச்சி!

webteam

சென்னை மாதவரம் அருகே பள்ளிக்குச் சென்று குழந்தைகளை அழைத்து வந்த பெண், வீட்டில் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 

சென்னை மாதவரம் அடுத்த கொசப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் குமார். இவர் அதேபகுதியில் தேநீர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி இல்லத்தரசியாக இருக்கிறார். இந்தத் தம்பதியினரின் குழந்தைகள் அருகில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். மனோஜ் தேநீர் கடையை பார்த்துக்கொள்வதால், வீட்டின் பொறுப்புகளை நந்தினி கவனித்து வந்துள்ளார். அத்துடன் மாலை பள்ளி விட்டதும், குழந்தைகளை நந்தினி தான் சென்று அழைத்து வருவார்.

இவர்களின் இந்த நடவடிக்கைகளை, திருடர்கள் யரோ நோட்டமிட்டு வந்துள்ளனர். அத்துடன் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து வர நந்தினி செல்லும் நேரத்தில், வீட்டில் யாரும் இருக்கமாட்டார்கள் என்பதையும் நோட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இன்று முதல் நாள் பள்ளிகள் திறக்கப்பட்டதால், பள்ளி முடிந்ததும் குழந்தைகளை அழைத்துவர நந்தினி சென்றுள்ளார். பின்னர் குழந்தைகளுடன் வீடு திரும்பிய அவர், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவின் கதவுகள் உடைக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து மாதவரம் பால்பண்ணை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்து ஆய்வு செய்த பின்னர், வீட்டிலிருந்து 30 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அத்துடன் பீரோவில் இருந்த ரூ.1.36 லட்சம் ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்தக் கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.