தமிழ்நாடு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் தற்போதைய நீர்மட்டம் எவ்வளவு?

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் தற்போதைய நீர்மட்டம் எவ்வளவு?

webteam

தொடர்மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பி வருகின்றன.

கடந்த சனிக்கிழமை இரவு முதல் திருவள்ளூர் மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அந்த வகையில், சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 2,925 கன அடி தண்ணீர் வருகிறது. மொத்த கொள்ளளவான 3,231 மி. கன அடியில் தற்போது 1,229 மி.கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

அதே போல, புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,300 மி.கன அடியில், தற்போதைய நீர் இருப்பு 1,818 மி.கன அடியாகவும், நீர்வரத்து 2,161 கன அடியாகவும் உள்ளது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1,081 மி.கன அடியில் தற்போது நீர் இருப்பு 131 மி.கன அடியாக உள்ளது. நீர்வரத்து 440 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மி.கன அடியில் நீர் இருப்பு 913 மி.கன அடியாகவும், நீர்வரத்து 1,923 கன அடியாகவும் உள்ளது.

மழை அதிகரித்தால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். இதனிடையே பொது மக்கள் யாரும் நீர்நிலைகளில் வேடிக்கை பார்க்க செல்லக்கூடாது எனவும், செல்ஃபி எடுக்க கூடாது எனவும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளார்.