சென்னையில் மிக்ஜாம் புயலால் கொட்டித்தீர்த்த மழையால் ஏற்பட்ட வடியாத வெள்ளம், பொதுமக்களுக்கு வடுவாக மாறி வாட்டி வருகிறது. இந்த நிலையில், ”கொரட்டூர் பகுதியில் வெள்ள நீர் வடியவில்லை. 4 நாட்களாக தண்ணீர்கூட கிடைக்கவில்லை. 20 ரூபாய் பாலை 50 ரூபாய்க்கு விற்கின்றனர்” என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக வீட்டுவசதி வாரியத்தில் வசிக்கும் மக்கள் கருத்து தெரிவித்தனர். அதில் ஒருவர், “2 நாட்களுக்கு முன்பாக ஒருவர் உயிரிழந்தார். அவரை அடக்கம் செய்யக்கூட முடியவில்லை. மாநகராட்சி லாரியை வரவழைத்து அவரது உடலை அடக்கம் செய்தோம்” என்றார். மற்றொருவர் பேசுகையில், ”மழையால் குளிக்காமல் இருக்கிறோம். எந்த அடிப்படை உதவியும் கிடைக்கவில்லை. யாரும் தங்களை வந்து பார்க்கவில்லை” எனத் தெரிவித்தார். தொடர்ந்து அப்பகுதி மக்கள், “குடியிருப்பு கட்டடத்தை விட்டு வெளியே வரமுடியாத அளவுக்கு வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.