தமிழ்நாடு

வீட்டின் முன் விளையாடிய 2 சிறுமிகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

வீட்டின் முன் விளையாடிய 2 சிறுமிகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

webteam

சென்னை கொடுங்கையூரில் வீட்டின் முன் விளையாடிய 2 சிறுமிகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர் பகுதியில் பாவனா, யுவஸ்ரீ என்ற 2 சிறுமிகள் உட்பட 5 சிறுவர்கள் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் முன் இருந்த மின்சாரப் பெட்டி ஒன்று திறந்த நிலையிலும், எந்தவித பராமரிப்பும் இன்றி பாதுகாப்பற்ற நிலையிலும் இருந்துள்ளது. அங்கு தண்ணீர் தேங்கியிருந்ததால் திடீரென கசிந்த மின்சாரம் சிறுவர்கள் மீது பாயத்தொடங்கியது. இதில் 3 சிறுவர்கள் அங்கிருந்து ஓட, பாவனா, யுவஸ்ரீ என்ற 2 சிறுமிகள் மட்டும் மின்சாரத்தில் சிக்கியுள்ளனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் சிறுமியை மீட்க தீவிரமாக போராடியும், பலனின்றி பரிதாபமாக 2 சிறுமிகளும் உயிரிழந்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக கூறும் அப்பகுதி மக்கள், நீண்ட மாதங்களாக அந்த மின்சாரப்பெட்டி பராமரிப்பற்ற நிலையில் இருப்பதாகவும், இதுகுறித்து பலமுறை மின்சார வாரியத்திடம் புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர். அத்துடன் மின்சாரம் கசிவது தொடர்பாக மின்வாரியத்தை தொடர்புகொண்டு புகார் தெரிவித்தும், நீண்ட நேரத்திற்கு எந்த மின் ஊழியர்களும் வரவில்லை என்றும் கூறினர். 
அதுமட்டுமின்றி மின்சாரப் பணிகளை மேற்கொள்ள வரும் அரசு ஊழியர்கள் அனைவரும் பணம் கொடுத்தால் மட்டுமே பணிபுரிய முடியும் என்று கூறுவதாகவும், பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த 2 சிறுமிகளின் உயிரிழப்பிற்கு மின்சார வாரியத்தின் அலட்சியமே காரணம் என்றும், அவர்கள் கூறினர். 
சிறுமிகள் இறந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வந்த போலீஸாரிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக 3 மின்வாரிய அதிகாரிகளை அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் உள்ளிட்ட மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்து மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.