சென்னை கே.கே. நகர் பி.டி. ராஜன் சாலையில் இன்று மாலை ராட்சச மரத்தின் கிளை ஒன்று சாய்ந்து விழுந்ததில் சென்னை ஆயுதப்படை காவலர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சென்னை அசோக் நகரில் இருந்து வடபழனி நோக்கி ஆயுதப்படை காவலர் சேகர், தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது கே.கே. நகரின் பிரதான சாலையான பி.டி ராஜன் சாலையில் மாலை 4 மணி அளவில் ராட்சச மரத்தின் கிளை ஒன்று சாய்ந்தது. இதில் ஆயுதப்படை காவலர் சேகரின் இருசக்கர வாகனத்தின் முன்பகுதி மரத்தின் கிளையில் சிக்கியது.
எதிர்பாராதவிதமாக சாய்ந்த மரத்தில் இருசக்கர வாகனத்தில் மாட்டித்தவித்த காவலரை அங்கிருந்த பொதுமக்கள், போக்குவரத்து காவலர்கள் மீட்டனர். லேசான காயங்களுடன் அடிபட்ட காவலரை பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு முதல் உதவிக்காக ஆம்புலன்ஸ் வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.
விபத்தின்போது ஆயுதப்படை காவலரின் வாகனம் சேதமடைந்தது. லேசான காயங்களுடன் காவலர் சேகர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பி.டி ராஜன் சாலையில் மரம் விழுந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி பணியாளர்கள் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினர். உச்ச நேரங்களில் எப்போதும் பரபரப்புடன் காணப்படும் பி.டி. ராஜன் சாலையில் மரம் விழுந்த நேரத்தில் வேறு யாரும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கே.கே. நகர், அசோக் நகர், கோடம்பாக்கம் பகுதியில் கடந்த மாதம் மட்டும் நான்கு மரங்கள் விழுந்து உள்ளது. எனவே மரங்களை பராமரிப்பதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.