தமிழ்நாடு

ஓட ஓட விரட்டி ஐடிஐ மாணவன் படுகொலை: 3பேர் கைது

ஓட ஓட விரட்டி ஐடிஐ மாணவன் படுகொலை: 3பேர் கைது

webteam

சென்னையில் ஐடிஐ மாணவன் கொலை வழக்கு தொடர்பாக 3பேரை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை நுங்கம்பாக்கம் அபு தெருவில் வசித்தவர் ரமேஷ். இவரது மகன் ரஞ்சித்(19). இவர் கிண்டி தொழில் நுட்பக் கல்லூரியில் ஐடிஐ படித்து வந்தார்.இந்நிலையில் இவர் தனது நண்பரின் அக்கா குழந்தையின் பிறந்தநாள் விழாவிற்குச் சென்று வருவதாகக் கூறி கடந்த19-ம்தேதி வெளியே சென்றுள்ளார். கடைசியாக தனது தாயார் சரஸ்வதியிடம் தான் பீச் ரயில் நிலையத்திலிருந்து வீட்டுக்கு திரும்ப வந்து கொண்டு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் நுங்கம்பாக்கம், ரயில் நிலையத்திற்கு வந்த ரஞ்சித்தை லயோலா கல்லூரியில் இருந்து வள்ளுவர் கோட்டம் செல்லும் குளக்கரை சாலையில் மடக்கி சிலர் அவரை கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்து ஓடிய ரஞ்சித் குளக்கரை சாலை - ஷெனாய் சாலை சந்திப்பில் விழுந்து இறந்து போனார். இந்தச் சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லயோலா வளாகத்திற்கு எதிரே உள்ள குளக்கரை சாலை 2-வது தெரு, முதல் ஷெனாய் சாலை சந்திப்பில் ரஞ்சித் இறந்து கிடக்கும் இடம் வரை ரத்தம் சிதறி இருப்பதைப் பார்த்த போலீஸார் அருகிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தினர்.

கொலை செய்யப்பட்ட மாணவர் ரஞ்சித்தின் கழுத்துப்பகுதியில் ஆழமான கத்திக்குத்து காயம் உள்ளது. குளக்கரை சாலையிலிருந்து விரட்டி விரட்டி குத்திக் கொல்லப்பட்டுள்ளார் ரஞ்சித். கைப்பற்றப்பட்ட ரஞ்சித்தின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டது.கொல்லப்பட்ட மாணவர் ரஞ்சித்தின் தந்தை இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் மரணமடைந்துள்ளார். மிகவும் கொடூரமாக செய்யப்பட்ட இந்தக் கொலை முன் விரோதம் காரணமாக நடந்து இருக்கலாமா என்ற கோணத்தில் நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 தனிப்படை அமைக்கப்பட்டு கொலை நடந்த பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்யப்பட்டது. அதில் கழுத்தில் வெட்டப்பட்டு ரஞ்சித் ஓடும் காட்சிகளும், கொலையாளிகள் பைக்கில் துரத்தி செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. கொலையாளிகள் தப்பிச் செல்லும் பைக்கில் நம்பர் பிளேட்டை வைத்து போலீசார் ஆய்வு செய்தனர்.  இந்நிலையில் பல்வேறு கட்ட தேடுதலுக்கு பிறகு கொலையில் தொடர்புடைய 3 பேரை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.

வடபழனியைச் சேர்ந்த கார்த்திகேயன், சாலி கிராமத்தைச் சேர்ந்த நவின் குமார், போரூரைச் சேர்ந்த சிவ கணேஷ் ஆகியோரை  கைது செய்த நுங்கம்பாக்கம் போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.