IIT Madras File Photo
தமிழ்நாடு

”தற்கொலை சம்பவங்களின் விசாரணை என்ன ஆச்சு?” : சென்னை ஐஐடி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

Justindurai S

சென்னை ஐஐடியில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

IIT

இவர்களில் கடந்த மார்ச் 31ஆம் தேதி மேற்கு வங்கத்தை சேர்ந்த சச்சின் குமார் ஜெயின் என்கிற ஆராய்ச்சி மாணவர் தற்கொலை செய்து கொண்டதில், அவரது பேராசிரியரான ஆஷிஷ் குமார் சென்னுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

கோட்டூர்புரம் காவல் துறையினர் மாணவர் சச்சின் குமார் ஜெயின் தற்கொலை குறித்து விசாரித்து வரும் நிலையில், காவல்துறையிடம் வாக்குமூலம் கொடுக்கும் பிற மாணவர்களுக்கு தேர்வு மதிப்பெண் தரப்பட மாட்டாது என பேராசிரியர் தரப்பில் மிரட்டல் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து சென்னை ஐஐடியில் தொடர்ந்து வரும் தற்கொலை சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சரியான விசாரணை மேற்கொள்ளாத நிர்வாகத்தை கண்டித்தும் மாணவர்கள் நேற்று இரவு முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை ஐஐடியின் இயக்குனர் காமகோடி, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதன்பின்னரும் சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீதும் தற்கொலை சம்பவங்களை சரிவர விசாரணை மேற்கொள்ளாத மாணவர் பிரிவு டீன் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்கொலை குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை குழு அமைக்கப்படும் என சென்னை ஐஐடி நிர்வாகம் தெரிவித்து வரும் நிலையில் அது ஒருதலைபட்சமாக செயல்பட வாய்ப்புள்ளதாக மாணவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் விசாரணை கமிட்டியில் மாணவப் பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும் என கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகிறது. சென்னை ஐஐடியின் பிரதான பகுதியான கஜேந்திரா வட்டத்தில் 400க்கும் மேற்பட்ட சென்னை ஐஐடி மாணவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.