Birth pt desk
தமிழ்நாடு

சென்னை| வீட்டிலேயே மனைவிக்கு மரபு வழி பிரசவம் பார்த்த கணவர்! பின்னணியில் மிகப்பெரிய வாட்ஸ் அப் குழு!

குன்றத்தூர் அருகே வீட்டிலேயே மனைவிக்கு மரபு வழி பிரசவம் பார்த்த கணவன். மருத்துவத்துறை எச்சரிக்கை

PT WEB

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனோகரன். இவர் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், தேவி கருமாரியம்மன் கோயில் தெருவில் தங்கி, பொக்லைன் வாகனம் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சுகன்யா (32), என்ற மனைவியும், கோபிகா (8), தாரணி (4), ஆகிய இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இதனிடையே சுகன்யா மூன்றாவதாக கர்ப்பம் தரித்துள்ளார். 10 மாதம் ஆன நிலையில் கடந்த 17-ஆம் தேதி அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

House

அதனைத் தொடர்ந்து அவருக்கு வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. முன்னதாக மனோகரன் தனது மனைவியை பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் தானே பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் அவர் வைத்திருந்த வாட்ஸ் அப் குழுவில் பகிரப்பட்டதையடுத்து வட்டார மருத்துவ அலுவலர் இது குறித்து குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து அவரது செல்போனை போலீசார் வாங்கிப் பார்த்த போது, அதில், "வீட்டில் குழந்தை பெற்றவர்களின் அனுபவம்" என்ற தலைப்பில் வாட்ஸ்அப் குழு ஒன்று அமைத்து அதில் மனோகரன் குழு உறுப்பினராக இருப்பது தெரியவந்தது. மொத்தம் 1024 உறுப்பினர்களைக் கொண்ட அந்த குழுவில், வீட்டில் பிரசவம் பார்ப்பது தொடர்பான ஏராளமான தகவல்கள் பகிரப்பட்டதும், அதனை பார்த்து மனோகரன் தனது மனைவிக்கு பிரசவம் பார்த்ததும் தெரியவந்தது.

Police station

தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருந்த போதிலும், இதுபோன்ற ஆபத்தான வேலைகளில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று மருத்துவத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.