தமிழ்நாடு

காசிமேடு மீன்சந்தை கட்டடத்தை திறக்க அனுமதி

காசிமேடு மீன்சந்தை கட்டடத்தை திறக்க அனுமதி

Rasus

சென்னை காசிமேடு மீன்சந்தையை புதிதாக கட்டப்பட்ட கட்டடத்திற்கு மாற்ற விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கிக்கொண்டுள்ளது.

சென்னை காசிமேடு பகுதியில் செயல்பட்டு வரும் மீன் சந்தைக்கு புதிய இடத்தில் கட்டடம் கட்டப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது. மீன்சந்தையை புதிய இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மீனவர்களில் ஒரு பகுதியினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால் மீன் சந்தைக்கான புதிய கட்டடத்தை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் 12-ம் தேதி இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்த தடையை நீக்கக் கோரி தமிழக அரசு மனு செய்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவராததால் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாக அரசு சார்பில் வாதிடப்பட்டது. இதையேற்ற நீதிபதி எம்.துரைசாமி கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர விதிக்கப்பட்ட தடையை நீக்கி இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். எனினும் வழக்கில் இறுதி தீர்ப்பு வரும்வரை மீனவர்கள் தற்போது சந்தை நடத்தி வரும் இடத்திலேயே கடை நடத்த அனுமதிக்கவேண்டும் என உத்தரவிட்டார். அதே நேரம் புதிய கட்டடத்திற்கு மாற விரும்பும் மீனவர்களை மற்ற மீனவர்கள் தடுக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

இந்த விவகாரத்தால் ஏதேனும் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் பிரச்னையை கட்டுக்குள் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.