கந்துவட்டி ஒழிப்பு தொடர்பாக திங்கட்கிழமை வரை காத்திருக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து கந்துவட்டி குறித்த புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்தனர். மேலும் கந்துவட்டி புகார்களின் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் நெல்லை தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.சுந்தர் அமர்வில் வழக்கறிஞர் சூரியபிரகாசம் முறையீடு செய்தார். அதில் கந்துவட்டி விவகாரத்தை கண்காணிக்க மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததை சுட்டிக்காட்டினார். இந்த உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார். அவரது முறையீட்டை விசாரித்த நீதிபதிகள், இதே விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் சில நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும், திங்கட்கிழமை வரை பொறுத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் திங்கட்கிழமை அன்று கந்துவட்டி ஒழிப்பு தொடர்பாக முக்கிய திருத்தங்கள் கொண்டுவரப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.