சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, ஓட்டுநர் நடத்துநர் பணி நியமனத்துக்கு பணம் பெற்றதாக சென்னை மத்திய குற்றப்பிரிவுக் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த மோசடி தொடர்பாக மத்திய அமலாக்கத்துறையும் செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்தது. அதே நேரத்தில் வழக்குத் தொடர்பான ஆவணங்களை வழங்கக் கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், மே 13 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதை எதிர்த்து செந்தில் பாலாஜியுடன் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் எஸ்.ஆனந்தி அமர்வு, ஆவணங்களை வழங்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், விசாரணைக்கு ஆஜராக அனுப்பிய சம்மனுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.