தமிழ்நாடு

“ஆர்.கே.நகரில் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா வழக்கு ரத்து”- தமிழக அரசின் பதிலால் நீதிபதிகள் அதிர்ச்சி..!

“ஆர்.கே.நகரில் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா வழக்கு ரத்து”- தமிழக அரசின் பதிலால் நீதிபதிகள் அதிர்ச்சி..!

Rasus

ஆர்.கே.நகரில் ரூபாய் 89 கோடி பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கு ரத்து செய்யப்பட்டு விட்டதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதனைக் கேட்ட நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஜெயலலிதா மறைவைத்தொடர்ந்து ஆர்.கே.நகரில் முதல் முறையாக 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கட்சிகள் பரப்புரையில் ஈடுபட்டன. அப்போது இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் குவிந்தன. இதனையடுத்து வருமான வரித்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட 32 இடங்களில் சோதனை மேற்கொண்டது. அதன்படி ஆர்.கே.நகர் தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததற்காக ஆவணங்கள் கிடைத்தன. இதனையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனிடையே பணப்பட்டுவாடா தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவும், விசாரணையை சிபிஐ-க்கு மாற்றவும் உத்தரவிடக்கோரி வைரக்கண்ணன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், அருண் நடராஜன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

கடந்த ஆண்டு இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், எம்.சுந்தர் அமர்வு, பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக அபிராமபுரம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கை சென்னை மாநகர காவல்துறை இணை ஆணையர் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஒரு வருடமாகியும் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே அதுகுறித்து இன்று மதியம் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி விளக்கமளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது திமுக தரப்பில் குறுக்கிட்டு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

அதேசமயம் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக அபிராமபுரம் காவல்நிலையத்தில் பதிவான வழக்கை ரத்து செய்யக்கோரி பள்ளிப்பட்டை சேர்ந்த பி.எம்.நரசிம்மன் என்பவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், எஃப்.ஐ.ஆர்-ஐ கடந்த மார்ச் மாதம் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் ரத்து செய்துவிட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசின் இந்த விளக்கத்தால் அதிர்ந்த நீதிபதிகள், பணப்பட்டுவாடா தொடர்பான வழக்குகள் இரண்டு நீதிபதிகள் அமர்வில் நிலுவையிலுள்ள நிலையில் எப்படி ரத்தானது என்பது பற்றியும் விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.