தமிழ்நாடு

பொங்கல் பரிசு முறைகேடு வழக்கு - அமைச்சர்கள் சக்கரபாணி, ஐ.பெரியசாமிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

பொங்கல் பரிசு முறைகேடு வழக்கு - அமைச்சர்கள் சக்கரபாணி, ஐ.பெரியசாமிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

Sinekadhara

தரமற்ற பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில் அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் ஐ. பெரியசாமி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக திருவள்ளூரை சேர்ந்த ஜெயக்கோபி தாக்கல் செய்துள்ள மனுவில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரத்து 296 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், இ- டெண்டரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் இருந்த வெல்லம், கரும்பு, பருப்பு, புளி உள்ளிட்ட பொருட்கள் தரமற்றவையாகவும், உயிரிழந்த பூச்சிகள் காணபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற தரமற்றப் பொருட்கள் விநியோகிப்பதால் மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனது குற்றச்சாட்டு புகார்மூலம் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லபட்டதாகவும், தரமற்றப் பொருட்கள் விநியோகத்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். தரமற்றப் பொருட்களை வழங்கிய அதிகாரிகள், அவற்றை தடுக்காத உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி ஆகியோருக்கு எதிராக லோக் ஆயூக்தா அமைப்பில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், தரமற்றப் பொருட்கள் விநியோகம் செய்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து லோக் ஆயுக்தா அமைப்பு, அமைச்சர்கள் சக்கரபாணி, ஐ. பெரியசாமி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 10ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.