குண்டர் தடுப்பு சட்ட நடைமுறைகளை புதுச்சேரி அரசு முறையாக கடைபிடிக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
புதுச்சேரியைச் சேர்ந்த செந்தில் என்பவர் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சட்ட நடைமுறைகளை முறையாக பின்பற்றாமல் செந்தில் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக மனுவில் அவர் கூறியிருந்தார்.
அரசு தனது கோரிக்கை மனுவை பரிசீலிக்கவில்லை என்றும், அறிவுரைக்கழகம் குண்டர் சட்டத்தின்கீழ் செந்தில் கைது செய்யப்பட்டதை தாமதமாகவே உறுதி செய்ததாகவும் மனுவில் அவர் தெரிவித்திருந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் அறிவுரைக்கழகத்திடம் விசாரணை நிலுவையில் இருந்தாலும் தன்னிடம் அளிக்கப்படும் மனுவை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
குண்டர் சட்டத்தின்கீழ் செந்தில் கைது செய்யப்பட்டதையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. குண்டர் சட்டத்தை பயன்படுத்தும் போது முறையான சட்ட நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். வருங்காலத்தில் அதிகாரிகள் தவறை சரிசெய்து கொள்ள வேண்டும்மென உத்தரவிட்டனர்.