தமிழ்நாடு

”இதை செய்தால் மட்டுமே யானைகள் வேட்டையை தடுக்க முடியும்” - அரசுகளுக்கு நீதிமன்றம் அட்வைஸ்

”இதை செய்தால் மட்டுமே யானைகள் வேட்டையை தடுக்க முடியும்” - அரசுகளுக்கு நீதிமன்றம் அட்வைஸ்

Sinekadhara

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்றினால் மட்டுமே காட்டு யானைகள் வேட்டையை தடுக்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

தமிழக வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அந்நிய மரங்களை அகற்றுவது, தமிழகத்தில் காட்டு யானைகள் வேட்டையாடுதலை தடுப்பது, ஊட்டி மற்றும் கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடையை அமல்படுத்துவது தொடர்பான வழக்குகள் இன்று சென்னைஉயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பான வரைவு கொள்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்றூம், யூகாலிப்டஸ் போன்ற அந்நிய மரங்களை அகற்றுவதற்காக நபார்டு வங்கி ரூ. 6 கோடி ஒதுக்கியுள்ளது என்றும், மேலும் மத்திய அரசும் ரூ. 7 கோடி நிதி ஒதுக்கியுள்ளது என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

தொடர்ந்து, மலையாட்டூரில் 18 காட்டு யானைகள் கொல்லப்பட்ட வழக்கை விசாரித்த பெரியாறு புலிகள் சரணாலய அதிகாரி மனுசத்தியன், காட்டு யானைகள் வேட்டையாடப்படுவது தொடர்பான புலனாய்வு குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கேரள வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், நீலகிரி மலை ரயில் பாதை அருகில் கொட்டப்பட்டிருந்த 2387 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது என்றும், நீலகிரி மலை ரயிலில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கு பதிலாக தண்ணீர் கேன்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வு, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்றினால் மட்டுமே காட்டு யானைகள் வேட்டையை தடுக்க முடியும் என்றும், வனப்பகுதிகளில் வளர்ந்துள்ள அந்நிய மரங்களை அகற்றி தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ வேண்டும் என்றும் கருத்து தெரிவித்ததுடன், தமிழக வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அந்நிய மரங்களை அகற்றுவது, தமிழகத்தில் காட்டு யானைகள் வேட்டை தடுப்பு, ஊட்டி மற்றும் கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அமல்படுத்துவது தொடர்பான வழக்குகள் மார்ச் 18க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.