மத வழிபாட்டுத் தலங்களின் விதிமீறல் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் உரிய சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் என தமிழக தலைமை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டிருக்கிறார்.
உரிய கட்டிட அனுமதி பெறாமல் கட்டப்பட்டதாகக்கூறி தேவாலயத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையை எதிர்த்து ஈரோடு தொப்பம்பாளையம் பெந்தக்கோஸ்த் மிஷன் சர்ச் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மக்களின் மத உணர்வுகளை காரணம்காட்டி ஆக்கிரமிப்பில் ஈடுபடுவது, அதிக ஒலி எழுப்புவது, பிறருக்கு இடையூறு ஏற்படுத்துவது போன்ற விதிமீறல்களை அரசு தீவிரமாக கருத வேண்டும். மத வழிபாட்டுத் தலங்களில் ஏற்படுத்தப்படும் இடையூறுகளால் ஒரு மனிதன் நிம்மதியாக உறங்கக்கூட முடியவில்லை. நிம்மதியான வாழ்க்கைக்கான பாதுகாப்பை அரசு நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.
அப்போது அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடத்தை பயன்படுத்த அனுமதிக்கப்படாது. அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலான சத்தத்துடன் தடை செய்யப்பட்ட ஒலிபெருக்கிகளை பயன்படுத்த அனுமதிக்க முடியாது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மத வழிபாட்டுத் தலங்களின் விதிமீறல் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் உரிய சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் என தமிழக தலைமை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டிருக்கிறார்.