செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை அடுத்த குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று நள்ளிரவு விக்னேஷ் தனது உறவினருடன், தாம்பரம் மண்ணிவாக்கம் சாலையில் முடிச்சூர் பகுதியில், இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது கருப்பு நிற கார் ஒன்று அவரது இருசக்கர வாகனத்தை இடிப்பது போல் வந்ததோடு தாறுமாறாக ஓடியுள்ளது.
இதனைத் தொடர்ந்து சக வாகன ஓட்டிகள் மற்றும் விக்னேஷ் அகியோர் இணைந்து அந்த காரை மடக்கிப் பிடித்து கார் ஓட்டுனரிடம் ஏன் இப்படி காரை ஓட்டுகிறீர்கள் என கேள்வியெழுப்பி உள்ளனர். அப்போது காரில் போலீஸ் என்ற பெயர் பலகை இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் காவலர் இருந்துள்ளார்.
காவலர் போதையில் இருப்பதை உணர்ந்து கொண்ட பொதுமக்கள் தவறு செய்பவர்களை தட்டிக் கேட்க வேண்டிய காவலர் நீங்களே போதையில் இப்படி வாகனத்தை ஒட்டி வரலாமா என கேள்வி எழுப்பினர். பொதுமக்கள் பல்வேறு கேள்விகளை முன் வைத்தும் எந்தவித பதிலும் சொல்ல முடியாத நிலையில், அந்த காவலர் இருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக வீடியோ வைரலாகி வரும் நிலையில், தலைமை காவலர் ராமதுரையை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.