தமிழ்நாடு

தொழிலதிபர் கடத்தல் வழக்கு: போலீசாருக்கு எதிரான வழக்கு சிபிஐக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவு

தொழிலதிபர் கடத்தல் வழக்கு: போலீசாருக்கு எதிரான வழக்கு சிபிஐக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவு

webteam

தொழிலதிபரை கடத்தி, சிறை வைத்து, 5.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அபகரித்ததாக உதவி ஆணையர் உள்ளிட்ட போலீசாருக்கு எதிரான வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் என்பவரை கடத்திச்சென்று, சிறைப்படுத்தி, 5.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அபகரித்ததாக திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், அப்போது காவலர்களாக இருந்த கிரி, பாலா, சங்கர் மற்றும் அனைத்திந்திய இந்து மகா சபா கட்சித் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீகண்டன், அவரது மகன் தருண் கிருஷ்ணபிரசாத், சிவா ஆகியோர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி தொழிலதிபர் ராஜேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதேபோல் தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி குற்றம் சாட்டப்பட்ட சிவகுமார் உள்ளிட்டோரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி இளந்திரையன், இந்த வழக்கில் காவல்துறையினர் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும், குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் உள்ளதால் புலன் விசாரணையில் தலையிட முடியாது என்றும் கூறி, வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் மாநில போலீசார், குறிப்பாக உயரதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதால் வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு தொடர்பான ஆவணங்களை உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்கும்படி சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டார். வழக்கை முழுமையாக விசாரித்து ஆறு மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சிபிஐக்கு நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார்.