தமிழ்நாடு

ஓ.பி.ரவீந்திரநாத் குமாருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

ஓ.பி.ரவீந்திரநாத் குமாருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

Rasus

தேனி நாடாளுமன்ற தொகுதி தேர்தலை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தேர்தல் ஆணையமும், அதிமுக எம்.பி.யான ரவீந்திரநாத் குமாரும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2019 மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில், ஓ. பன்னீர்செல்வத்தின் மகனான ரவீந்திரநாத் குமார் அதிமுக சார்பாகவும், காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அமமுக சார்பாக தங்க தமிழ்ச்செல்வனும் போட்டியிட்டனர். இதில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார். இதனிடையே தேனி தேர்தல் செல்லாது என அறிவிக்கக் கோரியும், ரவீந்திரநாத் குமாரின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரியும் தேனி தொகுதியின் வாக்காளர் மிலானி என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.

அதில், தேனி தொகுதியில் ரவீந்திரநாத் வெற்றி பெற, வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்ததுதான் காரணம் என்றும், அதற்கான வீடியோ ஆதாரங்களும், ஏராளமான புகார்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்த நிலையில், வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணையம், தேனி தேர்தலை மட்டும் ரத்து செய்யவில்லை எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து இந்திய தேர்தல் ஆணையம், தலைமை தேர்தல் அதிகாரி, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 29-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.