தமிழ்நாடு

கோவிலுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்ய பத்திரப்பதிவு - ஆர்.பி.சௌத்ரி வழக்கு தள்ளுபடி

கோவிலுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்ய பத்திரப்பதிவு - ஆர்.பி.சௌத்ரி வழக்கு தள்ளுபடி

Sinekadhara

கோவிலுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்வதற்கான பத்திரத்தை பதிவு செய்யும்படி உத்தரவிட மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்சின் சார்பில் அதன் நிர்வாக இயக்குனரான பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை நுங்கம்பாக்கம் வடக்கு மாட வீதியில் உள்ள அருள்மிகு அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான 2,779 சதுர அடி இடத்தில் குத்தகை அடிப்படையில் குடியிருந்த மீரான் மற்றும் ஷெரீப் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற தீர்ப்பின்படி, அந்த இடம் இரு குத்தகைதாரர்களுக்கும் விற்கப்பட்டதாகவும், அதை அவர்கள் எம்.இ.சித்திக்கா என்ற பெண்மணிக்கு விற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த இடத்தை சித்திக்கா தனது மகளுக்கு செட்டில்மெண்ட் செய்வதற்கும், அதன்பின்னர் அவர் மூலமாக தனக்கு விற்பதற்கும் பத்திரப்பதிவுத் துறையை அணுகியதாகவும், ஆனால் கோவில் தொடர்புடைய சர்வே எண்களுக்குட்பட்ட சொத்துக்களை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என கோவிலின் பரம்பரை அறங்காவலர் அளித்த கடிதத்தின் அடிப்படையில் தங்கள் பத்திரத்தை பதிவுசெய்ய பத்திரப்பதிவுத் துறை மறுத்து உத்தரவு பிறப்பித்துள்ளதாக மனுவில் தெரிவித்திருந்தார். எனவே பதிவுசெய்ய மறுக்கும் பதிவுத்துறை உத்தரவை ரத்துசெய்து, சித்திக்கா என்பவரிடமிருந்து தான் வாங்கும் இடத்திற்கான பத்திரப்பதிவை செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம். தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் மீரான் மற்றும் ஷெரீஃப் என்பவருக்கு விற்கப்பட்ட ஆவணம், மீரான் இறந்த நான்கு மாதங்களிலேயே ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும், அவரது வாரிசுகளுக்கு அந்த இடம் பாத்தியமானது என்பதற்கான எந்தவித ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. எனவே கோவிலிடமிருந்து செய்யப்பட்ட விற்பனையே செல்லாது என்ற நிலையில், அதே இடத்தை தற்போது பத்திரப்பதிவு செய்யும்படி மனுதாரர்கள் கோர முடியாது என தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி தண்டபாணி பிறப்பித்த உத்தரவில், ஒரு சொத்து விற்கப்படும்போது கோயிலின் நலனே பிரதானமாக இருக்க வேண்டுமெனவும், சொத்துகளை கையாளும்போது கோவிலின் நலன்சார்ந்து அறங்காவலர்கள் செயல்பட வேண்டுமெனவும் தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். கோவிலின் நலன் பாதிக்கப்படும்போது மட்டுமல்லாமல், கோவிலின் பிரதான தெய்வத்திற்கு கிடைக்கவேண்டிய நீதி மறுக்கப்படும்போதும், நீதிமன்றம் தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கோவில் நிலம் விற்கப்படும்போது அறங்காவலர் மற்றும் குத்தகைதாரர் ஆகியோர் கூட்டாக சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவே இந்து சமய அறநிலையத்துறையிடம் அனுமதி பெறவேண்டும் என்ற விதி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் 1987ஆம் ஆண்டு நடந்த விற்பனை தொடர்பாக எவ்வித அனுமதியும் பெறப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

1987ம் ஆண்டு 20 ஆயிரத்து 852 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கப்பட்ட நிலம், அடுத்த இரண்டாண்டுகளில் 25 மடங்கு உயர்ந்து 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதை பார்க்கும்போது, கோவிலின் நலன் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாவதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். அதனடிப்படையில், நுங்கம்பாக்கம் கோவிலுக்கு சொந்தமான நிலம் தொடர்பான பத்திரப்பதிவை ஏற்க மறுத்த பதிவுத்துறை உத்தரவு செல்லும் எனக் கூறி சூப்பர் குட் பிலிம்ஸ் மற்றும் சித்திக்கா ஆகியோர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.