டாஸ்மாக் கடைகளை அரை மணிநேரம் முன்பே மூடுவது குறித்து விளக்கமளிக்கும்படி அரசுத்தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் மதுபானக் கடை மற்றும் பார் ஆகியவை தினமும் மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுவதால், மூடும் நேரத்தில் மதுபானம் வாங்குபவர்கள், மதுபானக் கடை முன்பும், சாலையோரத்திலும், அருகிலுள்ள பொது இடங்களிலும் அமர்ந்து மது அருந்துவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி, திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூரை சேர்ந்த மோகன், கோபிநாத் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
பொது இடங்களில் மது அருந்துவது சட்டப்படி குற்றம் என்பதால், டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்ட பிறகு பொது இடங்களில் மது அருந்துவதை முறைப்படுத்த உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தாக்கல் செய்த பதில் மனுவில், டாஸ்மாக் மதுக்கடைகள், பார்கள் திறக்கும் மற்றும் மூடும் நேரம் என்பது முழுக்க முழுக்க அரசின் கொள்கை முடிவு எனவும், அதில் தலையிட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பார்கள் செயல்படும் நேரத்தை 10 மணிக்கு மேல் நீட்டிப்பது அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, டாஸ்மாக் கடைகளை அரை மணி நேரம் முன்பே மூடுவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்ட பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தது.