தமிழ்நாடு

அமெரிக்கா வரை சென்று தி வேல்ட்ஸ் பெஸ்ட் பட்டத்தை பெற்ற சென்னை சிறுவன்

அமெரிக்கா வரை சென்று தி வேல்ட்ஸ் பெஸ்ட் பட்டத்தை பெற்ற சென்னை சிறுவன்

webteam

அமெரிக்காவில் நடந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட தமிழக சிறுவன் லிடியன் நாதஸ்வரம் தி வேல்ட்ஸ் பெஸ்ட் என்ற பட்டத்தை தட்டிச்சென்றுள்ளார்.

பெயரிலேயே நாதஸ்வரம் வைத்திருக்கும் சென்னை சிறுவன் 'லிடியன் நாதஸ்வரம்'. அமெரிக்காவில் நடந்த தி வேல்ட்ஸ் பெஸ்ட் ( The World's Best) என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டார். தன்னுடைய அசாத்திய திறமையால் பியானோவை வாசித்து உலக அரங்கையே அதிரச் செய்தார். பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட போட்டியில் பல சாதனைகளை செய்தார் லிடியன். 

1900 ம் ஆண்டில் ரஷ்யன் இசைக்கலைஞரால் உருவாக்கப்பட்ட பிளைட் ஆப் பம்பிள்பி (Flight of the Bumblebee) என்ற இசையை சராசரியாக வாசிக்கும் நேரத்தை விட இரண்டு மடங்கு வேகத்தில் வாசித்து அனைவரையும் வாய்பிளக்கச் செய்தார் லிடியன். அதைப்பார்த்து அசந்த ஹாலிவுட் பாடகர் ஜேம்ஸ் கார்டன், தான் பார்த்த இசை நிகழ்ச்சிகளில் இதுதான் சிறந்தது ட்வீட் செய்ய அந்த வீடியோ உலகம் முழுவதும் பரவியது. ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பலரும் சிறுவன் லிடியனுக்கு பாராட்டு தெரிவித்து ட்வீட் செய்தனர்.

ஒரு கையால் மிஷன் இம்பாசிபில் தீம் மியூசிக் வாசித்துக்கொண்டே மறு கையால் ஹாரிபாட்டர் தீம் மியூசிக்கை வாசிப்பது, கண்களை கட்டிக்கொண்டு பியோனா இசை, கைகளை பின்பக்கமாக திருப்பியே பியோனா வாசிப்பது என்று லிடியனின் சாகசங்கள் தி வேல்ட்ஸ் பெஸ்ட் நிகழ்ச்சியை அலங்கரித்தது.

இந்நிலையில் கடைசி சுற்றுவரை சென்ற லிடியன், தி வேல்ட்ஸ் பெஸ்ட் என்ற பட்டத்தை தட்டிச்சென்றார். பட்டத்துடன் அவருக்கு பரிசாக ரூ.7 கோடி ரொக்கமும் வழங்கப்படுகிறது. அமெரிக்காவரை சென்று தன்னுடைய இசை உலகை உலகுக்கு உணர்த்திய தமிழக சிறுவனை நடிகர்கள் சூர்யா, மாதவன் உள்ளிட்ட பலரும் வாழ்த்தி வருகின்றனர்