முகமது நிஷாத், நாசியா pt desk
தமிழ்நாடு

சென்னை: சிறுமியை துன்புறுத்தி கொலை செய்தது ஏன்? – பெண் பரபரப்பு வாக்குமூலம்

சென்னையில் 14 வயது சிறுமி சித்ரவதை செய்து அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறுமியின் மீது கணவர் பார்வை திரும்பியதால் சித்ரவதை செய்ததாக கைதான பெண் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

PT WEB

செய்தியாளர்: ஜெ.அன்பரசன்

சென்னை அமைந்தகரை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒன்றில் வீட்டு வேலை செய்து வந்த 14 வயது சிறுமி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட சிறுமி, 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் முகமது நிஷாத் என்பவரின் குழந்தையின் பராமரிப்பாளராக வேலை செய்து வந்துள்ளார் என்பதும் சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட சிறுமி

இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள முகமது நிஷாத் அவரது மனைவி நிவேதா என்ற நாசியா, லோகேஷ் அவரது மனைவி ஜெயசக்தி, வீட்டு வேலைக்கார பெண் மகேஸ்வரி, முகமது நிஷாத்தின் சகோதரி சீமா பேகம் ஆகியோரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக சிறுமியை அடிக்கடி சித்ரவதை செய்து துன்புறுத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 31.10.2024 அன்று சிறுமியை தாக்கி அயன்பாக்ஸால் சூடு வைத்து அடித்ததால் அவர் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.

சிறுமியின் மீது தனது கணவரின் பார்வை திரும்பியதாக சந்தேகப்பட்டு கொடூரமாக சித்தரவதை செய்ததாக கைதான நாசியா வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து சிறுமியின் மீது ஏதேனும் ஒரு குற்றச்சாட்டை சுமத்தி அவரை மற்றவர்களும் பெல்ட் மற்றும் மூங்கில் கம்பால் அடித்து துன்புறுத்தியுள்ளனர். அயன்பாக்ஸ், சிகரெட்டால் சூடு வைத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Aminjikarai Police station

இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 6 பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், வருகிற 16-11-2024 வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.